கேரளாவில் தனியார் தொலைக்காட்சி நிருபர், 3 சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 2 பேர் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். 7 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 சுகாதார துறை ஊழியர்களுக்கும் இன்று நோய் பரவியுள்ளது. இன்று 10 பேர் நோயிலிருந்து குணமாகி உள்ளனர். இவர்கள் கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேரும், பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் ஆவர். தற்போதைய சூழ்நிலையில் செய்தி சேகரிக்கும் போது பத்திரிகையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் அறிவுறுத்தி உள்ளேன். தற்போது காசர்கோடு மாவட்டத்தில் ஒரு பத்திரிகையாளருக்கு நோய் பரவி உள்ளதால் மற்ற பத்திரிகையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமையில் செல்ல வேண்டுமென்று காசர்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். கேரளாவில் இதுவரை 495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 20,673 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 20,172 பேர் வீடுகளிலும் 501 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 84 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 24, 952 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 23,880 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக தொடர்பு அதிகம் உள்ளவர்களில் 875 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 801 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்த்துள்ளது. இன்று கேரளாவில் இரண்டு பஞ்சாயத்துக்கள் நோய் தீவிரமான பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் மற்றும் காசர்கோடு மாவட்டம் அஜானூர் ஆகிய பஞ்சாயத்துக்கள் நோய் தீவிரம் உள்ள பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. கண்ணூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 28 நோய் தீவிரம் அதிகம் உள்ள பகுதிகள் உள்ளன. திருச்சூர், ஆலப்புழா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நோயாளிகள் ஒருவரும் இல்லை. தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக கேரளா மிகவும் அசாதாரணமான சூழ்நிலையை கடந்து சென்றுகொண்டிருக்கிறது . பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் தான் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதத்தில் 6 நாட்கள் என 5 மாதங்களுக்கு தற்காலிகமாக பிடித்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதேபோல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் பிடிக்க இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள 3.23 லட்சம் மலையாளிகள் கேரளாவிற்கு வர முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 57,460 பேர் வேலையை இழந்தவர்கள் ஆவர். வயதானவர்கள் 10,007 பேரும், சுற்றுலா விசா காலாவதி ஆனவர்கள் 41,236 பேரும், மாணவர்கள் 7272 பேரும், கர்ப்பிணிகள் 9,515 பேரும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments