கேரளாவில் இன்று யாருக்கும் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இன்று 9 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா நோயிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 392 ஆகும். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களில் கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர். கேரளாவில் இன்று வரை பல்வேறு மாவட்டங்களிலாக 21,499 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 21,067 பேர் வீடுகளிலும், 432 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் இன்று 106 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 27, 150 பேரின் உமிழ் நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 26,225 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக தொடர் அதிகமுள்ள நபர்களில் 1,862 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 999 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் இன்று புதிதாக 10 நோய் தீவிரம் அதிகமாக உள்ள பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காசர்கோடு மாவட்டத்தில் உதுமா, மலப்புரம் மாவட்டத்தில் மாரஞ்சேரி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் குளத்தூர், பாறசாலை, அதியன்னூர், காரோடு, வெள்ளறடை, பாலராமபுரம் மற்றும் குன்னத்துகால் ஆகியவை புதிதாக நோய் தீவிரம் உள்ள பகுதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- Log in to post comments