Skip to main content

கேரளாவில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று,  மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

 

 

திருவனந்தபுரம், 

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னையில் இருந்தும்,  மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குவைத்திலிருந்தும் வந்தவர்கள் ஆவர். வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இன்று கேரளாவில் யாருக்கும் நோய் குணமாகவில்லை. இதுவரை கேரளாவில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆகும்.  489 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 27 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றுவரை 1307 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்துள்ளனர். இவர்களில் 650 பேர் வீடுகளிலும், 641 பேர் கொரோனா முகாம்களிலும், 16 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 229 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.  கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 27, 986 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 27,545 பேர் வீடுகளிலும், 441 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 157 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 37, 858 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில்  37,098 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இதுதவிர வெளிமாநில தொழிலாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் சமூக நெருக்கம் அதிகமுள்ள 3,842 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 3,791 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. கேரளாவில் இன்று புதிதாக நோய் தீவிரமுள்ள ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள நென்மேனி என்ற இடம் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில்   குறிப்பிடப்பட்டுள்ளது.

date