Skip to main content

கேரளாவில் இன்று 2  பேருக்கு கொரோனா, 14 பேர் குணமடைந்தனர்: முதல்வர் பினராய் விஜயன் தகவல் 

TAMIL PRESS RELEASE 29-04-20

திருவனந்தபுரம்,
 கேரள முதல்வர் பினராய் விஜயன் வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் காசர்கோடு மாவட்டத்தையும், இன்னொருவர் மலப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்துள்ளார். இன்னொருவருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இன்று 14 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 3 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 2 பேர் மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய  மாவட்டங்களையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 497 ஆகும். பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இன்றுவரை 20,711 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 20,285 பேர் வீடுகளிலும், 426 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 25,973 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 25,135 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 47 நோயாளிகள் சிகிச்சையி்ல் உள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் 18 பேரும்,  இடுக்கி மாவட்டத்தில் 14 பேரும், கொல்லம் மாவட்டத்தில் 12 பேரும், காசர்கோடு மாவட்டத்தில் 9 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர். தற்போது கேரளா முழுவதும் 70 நோய் தீவிர பகுதிகள் உள்ளன. கேரளாவில் தற்போது பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிவரை முக கவசம் அணியாத 954 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் எதிர்பாராத இடங்களிலிருந்து பரவி வருகிறது. பிற மாநிலங்களிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் மூலமும் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது இயலாத காரியமாகும்.இதனால் நிலைமை மேலும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது . பல இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவது தெரியவந்துள்ளது. இதை தவிர்க்க வேண்டும். கொரோனா காரணமாக பல்வேறு துறைகளைப் போல கல்வித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலனுக்காக பல்கலைக்கழக பாடங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகங்களில் வரும் 4ம்தேதி முதல் கவுண்டர்கள் திறக்கப்படும். கேரளாவில் தற்போது 3,60,000  வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல விரும்புகின்றனர். எனவே அவர்களை  ஊருக்கு அனுப்பி வைக்க  சிறப்பு இடைநில்லா ரயில் இயக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்களை பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை கூறியள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களை பஸ்களில் அனுப்பி வைக்க முடியாது. எனவே அவர்களை ஊருக்கு அனுப்ப இடைநில்லா சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளிமாநில தொழிலாளர்களுக்காக 20,826 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், அசாம், ஒடிஷா, பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் கேரளாவில் அதிகமாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து கேரளா திரும்ப 3.53 லட்சம் பேர் முன்பதிவு: முதல்வர் பினராய் விஜயன் தகவல்

திருவனந்தபுரம்,
முதல்வர் பினராய் விஜயன் கூறியது: வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு திரும்ப விரும்பும் மலையாளிகள் முன்பதிவு செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த சில தினங்களாக முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 201 நாடுகளில் உள்ள 3,53,468 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் மிக அதிகமாக ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ள 1,53, 660 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சவுதி அரேபியாவிலிருந்து 47,268 பேர் முன்பதிவு செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் இருந்துதான் மிக அதிக எண்ணிக்கையில் கேரளா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்திலிருந்து 2,112 பேரும், அமெரிக்காவிலிருந்து 1,895 பேரும், உக்ரைனில் இருந்து  1,764 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியல் மத்திய அரசுக்கும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன் பிறகு அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு வர விரும்புபவர்களுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை வரை 94,483 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து 30,576 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 29,181 பேரும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 13,113 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக மற்ற துறைகளைப் போல பத்திரிகை துறைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே பத்திரிகைத் துறைக்கு அரசால் முடிந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதன்படி அரசு விளம்பர பாக்கி தொகையான 53 கோடி ரூபாயை பத்திரிகைகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பத்திரிக்கைத்துறை மட்டும் அல்லாமல் எந்தத் துறையிலும் ஒருவர் கூட வேலை இழக்க கூடாது என்பதே அரசின்  நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

date