கேரளாவில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 7 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும், எர்ணாகுளம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த 7ம் தேதி அபுதாபியில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் ஆவர். வயநாடு மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் சென்னை கோயம்பேட்டுக்கு சென்று திரும்பியவர்கள் ஆவர். இன்று நாலு பேருக்கு நோய் குணமாகி உள்ளது. இன்று கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டத்தை ஒருவருக்கும் நோய் குணமாகி உள்ளது. இதுவரை 489 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ளனர். தற்போது 20 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காசர்கோடு மாவட்டத்தில் தான் இதுவரை மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் இருந்தனர். தற்போது இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். இந்த மாவட்டத்தில் 178 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 26, 712 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.இதில் 26,350 பேர் வீடுகளிலும், 362 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 135 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 37, 464 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 36, 630 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. சுகாதாரத் துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 3,815 பேரின் உமிழ் நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 3,525 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது கேரளாவில் 33 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Log in to post comments