கேரளாவில் இன்று தமிழ்நாட்டில் இருந்து வந்த 5 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது: இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 4 பேர் இடுக்கி மாவட்டத்தையும், தலா ஒருவர் பாலக்காடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இன்னொருவருக்கு எப்படி நோய் பரவியது என தெரியவில்லை. மீதம் உள்ளவர்களுக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இன்று 13 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் 6 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கேரளாவில் 481 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளிலாக 20,301 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 19712 பேர் வீடுகளிலும், 489 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 23, 271பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 22,537 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக தொடர்பு அதிகமாக உள்ள நபர்கள் ஆகியோரில் 875 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 611 பேருக்கு நோய் இல்லை என தெரி்யவந்துள்ளது. கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று 3056 பேரின் உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து இந்த இரு மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு,மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. இதேபோல ஹாட்ஸ்பாட் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் வண்டன்மேடு இரட்டையார் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஐமணம், வெள்ளூர், அயற்குண்ணம் தலையோலப்பரம்பு ஆகிய 6 இடங்கள் ஹாட்ஸ்பாட் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நோயாளிகள் ஒருவருமில்லை. இன்று பிரதமருடன் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட வீடியோ கான்பரன்ஸ் நடந்தது. இதில் கேரளா சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மே 15 வரை நிபந்தனைகளுடன் கூடிய லாக் டவுன் அமலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. லாக் டவுனை ஒரேகட்டத்தில் முழுவதுமாக வாபஸ் பெறாமல் படிப்படியாக வாபஸ் பெறுவது நல்லது என்றும் கூறப்பட்டது. வெளி மாநிலங்களுக்கு இடையேயான பூக்குவரத்தை உடனடியாக தொடங்கக்கூடாது. கேரளாவில் தற்போது சுமார் 4 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். லாக் டவுன் முடிந்த பின்னர் அவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல இடை நில்லா ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு சிறப்பு தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்க உரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு திரும்பி வரும் போது அவர்களின் விமான கட்டணத்தை மத்திய அரசே செலுத்த வேண்டும். லாக் டவுன் காரணமாக சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். வெளிமாநிலங்களில் சிரமப்படும் கேரளாவை சேர்ந்த நர்சுகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களிலிருந்து வனப்பாதை வழியாக ஏராளமானோர் கேரளாவுக்குள் ஊடுருவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இதை தடுக்க வனத்துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments