Skip to main content

கேரளாவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: முதல்வர் பினராய் விஜயன் தகவல் 

 

திருவனந்தபுரம்,

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. இன்று 61 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 34 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக கேரளாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. இதுவரை 499 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

21,724 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.  இவர்களில் 21,352 பேர் வீடுகளிலும், 372 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 33,010 பேரின் உமிழ் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 32,315 பேருக்கு நோய் இல்லை என தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது 84 நோய் தீவிர பகுதிகள்  உள்ளன. கேரளாவில் கொரோனா நோய் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் வெளிநாடுகளில் மலையாளிகள் இந்நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இதுவரை 80க்கும் மேற்பட்ட மலையாளிகள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 1,62,263 மலையாளிகள் கேரளா வர முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகமாகும். கர்நாடகாவில் இருந்து 55,188 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 50,863 பேரும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 22,515 பேரும், தெலங்கானாவில் இருந்து 6,422 பேரும், குஜராத்திலிருந்து 4,959 பேரும், ஆந்திராவில் இருந்து 4, 338 பேரும், டெல்லியில் இருந்து 4,236 பேரும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 3,293 பேரும், மத்திய பிரதேசத்தில் இருந்து 2,490 பேரும், பீகாரில் இருந்து 1,678 பேரும், ராஜஸ்தானிலிருந்து 1,494 பேரும், மேற்குவங்க மாநிலத்தில் இருந்து 1,357 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 28, 272 பேர் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 5,470 பாஸ்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் வரை கேரளாவில் உள்ள பல்வேறு சோதனை சாவடிகள் வழியாக 515 பேர் கேரளாவுக்கு வந்துள்ளனர். கேரளாவுக்கு வர விரும்புவர்கள் அவரவர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவரை கேரளாவிலிருந்து 13,818 வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற ரயில்களில் வெளிமாநிலத்தில் உள்ள மலையாளிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிமாநிலத்திலுள்ள மலையாளிகளை அழைத்து வர இடைநில்லா ரயில் இயக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து பல வெளிநாடுகள் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளன. இது கேரளாவுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. பல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கேரளாவில் தொழில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில் கேரளாவில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உடனடியாக அனுமதி வழங்கப்படும். அனுமதி கிடைத்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் தொழிலை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

date