கேரளாவில் இன்று 26 பேருக்கு கொரோனோ தொற்று: முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 5 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா 3 பேர் பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். 7 பேர் சமீபத்தில் வெளி நாடுகளிலிருந்தும், 4 பேர் மும்பையில் இருந்தும் , 2 பேர் சென்னையில் இருந்தும், ஒருவர் பெங்களூருவில் இருந்தும் வந்துள்ளனர். 11 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இன்று 3 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் கொல்லம் மாவட்டத்தையும், ஒருவர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சில தினங்களாக கேரளாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்து வந்தது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 10 ஆகவும் , இன்று 26ஆகவும் உயர்ந்துள்ளது. இது நாம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. காசர்கோட்டில் இன்று நோய் பாதித்தவர்களில் 2 பேர் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் ஆவர். வயநாட்டில் இன்று மேலும் ஒரு போலீஸ்காரருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 36,910 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 36, 362 பேர் வீடுகளிலும், 548 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். கேரளாவில் இதுவரை 560 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 174 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 40,692 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 39,619 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகள் 15 ஆக குறைந்துள்ளது. இவற்றில் கண்ணூர் மாவட்டம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3ம், வயநாடு மாவட்டத்தில் 7ம் கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் தலா ஒன்றும் உள்ளன. உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் கொரோனா நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயைப் போலவே இதுவரை இந்நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வரும் காலங்களில் நாம் கொரோனாவை மனதில் வைத்துக்கொண்டு நமது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தேவையில்லாத பயணங்களையும், விழாக்களையும் தவிர்ப்பது நல்லது. வெளியில் செல்லும்போது முக கவசம் மற்றும் சமூக விலகலை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டல்கள் உள்பட பகுதிகளில் முன்கூட்டியே நேரத்தை நிச்சயித்துக் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்க வேண்டும். வெளிநாடுகளில் இதுவரை 124 மலையாளிகள் இறந்துள்ளனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வருபவர்கள் பின்னர் விமான நிலையத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு செல்லும்போது வழியில் கழிப்பறை உட்பட வசதி கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்காக 185 இடங்களில் கழிப்பிடம் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்படும். கேரள எல்லையில் பணம் வாங்கிக் கொண்டு சிலர் ஆட்களை கேரளாவுக்கு கடத்துவதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மே 8ம் தேதி சென்னையிலிருந்து வந்த மலப்புரத்தை சேர்ந்த 8 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சோதனைச் சாவடியில் இருந்தபோது தான் சோதனைச் சாவடியில் பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை அனுமதிப்பதாக கூறி காங்கிரசை சேர்ந்த இரண்டு எம்பிக்கள், ஒரு எம்எல்ஏ உள்பட சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது அவரகளுக்கு அருகில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டவரும் இருந்துள்ளார். இதனால் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏ மற்றும் அங்கு பணியில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாலக்காடு மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையுடன் போலீசாரும் இணைந்து செயல்படுகின்றனர். இந்நிலையில் தற்போது சுகாதார துறையினருடன் போலீசாருக்கும் கொரோனா நோய் பரவி வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 32 நாட்கள் பச்சை மண்டலத்திலிருந்த வயநாடு மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்த ஒரு டிரைவரால் மீண்டும் நோய் பரவி வருகிறது. அந்த டிரைவர் மூலம் இந்த மாவட்டத்தில் 10 பேருக்கு நோய் பரவியுள்ளது. இவர் மூலம்தான் மூன்று போலீசாருக்கும் நோய் பரவியது. இந்த மாவட்டத்தில் பணியில் உள்ள 1200 போலீசாரில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து கேரளாவுக்கு முதல் ரயில் நாளை அதிகாலை வருகிறது. ரயில் நிலையங்களில் விமான நிலையத்தில் இருப்பதை போலவே அனைத்து பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை போலவே மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்தும் கேரளாவுக்கு இடை நில்லா ரயில்கள் இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கேரளா வரும் ரயில்கள் வெளிமாநிலங்களில் பல இடங்களில் நின்று வருகிறது. இதன் மூலம் கேரளாவில் நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே வெளிமாநிலங்களில் இந்த ரயில்களுக்கு அதிகமாக நிறுத்தம் அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரயில்களில் கேரளா வருபவர்வர்களுக்கு முறையான பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரயில்களில் முன்பதிவு செய்யும்போது பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 18ம் தேதி தொடங்கும். கேரளாவில் இவ்வருடம் பருவமழை மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை தங்க வைக்க உரிய வசதி ஏற்படுத்த இப்போதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments